Thursday 26 July 2007

நினைத்தாலும் மறக்க முடியாதவை : தடம் 2

தலையனையை நனைக்க
கன்னத்தில் வழிந்த கண்ணீர் போதும் என்பது போல
கன்னங்கள் காய்ந்திருந்தன.

எவர் எது பேசினாலும் இறுகி நிற்கும் இதயம்
தனித்து இருக்கும் போது புயலில் சிக்கிய வள்ளம் போல்
தள்ளாடும் பெரு மூச்சுகள் தொடரும்

அலை போல கண்ணீர் வழிந்தோடும்
நேரில் பார்ப்போருக்கு அது புரியாது
மூன்று தினங்கள் முறையான உறக்கம் இல்லை.
ஒரே ஒரு உடைதான் அந்த மூன்று நாட்களும்

முகத்தை கழுவியதோடு சரி
தினசரி மாற்றிய உடை பழக்கம்
பல் துலக்கி விட்டு தூங்கும் மன ஒழுக்கம்
எல்லாமே தலை கீழாகி இருந்தது

மாலையில் யோகாசன வகுப்புக்கு சென்று வந்து
ஒரு கப் பால் அருந்தி விட்டு சற்று நேரம் அமைதியாக
தியானத்தில் ஈடுபடுகிறேன்.

நாள் முழுவதும் உள்ள களைப்பு
தீருவது போன்ற ஒரு உணர்வு
இருப்பினும் மனசு மட்டும் சலனமாக இருக்கிறது

ஒரு போதும் இல்லாத பதட்டம்
இரவின் மடியில் வீழ்கிறேன்.

திடீரென அறைக் கதவு தட்டப்படும் ஓசை
எழுந்து கதவருகே வருகிறேன்

பலர் நிற்பது வெளியிலிருந்து வரும் ஒளியில் தெரிகிறது.

யாரது?

"போலீஸ் ,கதவைத் திற"
கடுமை குரலில் தெரிகிறது.

கதவைத் திறந்ததும் உள்ளே புகுந்த போலீசார்
என்னை மடக்கி கட்டிலில் அழுத்துகிறார்கள்.
நான் முரண்டு பிடிக்காமல் அவர்களுக்கு இடமளிக்கிறேன்.

ஆம் எதிர்ப்பது முட்டாள்தனம்.
போலீசார் அறை முழுவதும் எதையோ தேடுகிறார்கள்.

ஒன்றுமில்லை என்கிறார்கள்.
சற்று என்னை தளர்த்தி விட்டு கட்டிலில் அமரச் சொல்கிறார் இன்ஸ்பெக்டராக தெரிபவர்.
உட்காருங்கள் என்கிறேன்.

"உன் அறையில் குண்டுகள் இருக்கிறது என தகவல்.
எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்?"

நான் மெதுவாக சிரிக்கிறேன்.

புரிகிறது

இருந்தால் எடுங்கள் என்கிறேன்.

ஒரு போலீஸ்காரர்
என் அறைச் சுவரை அலங்கரிக்கும்
என் காதலியின் புகைப்படத்தை உற்று நோக்குகிறார்.

யார் இவர்?

என் காதலி...............

அவர் கன்னடத்தில் இன்ஸ்பெக்டரிடம்
இவரும் : இவரது அம்மாவும்தான் புகார் கொடுத்தவர்கள் என்கிறார்.

எனக்கு அது புரிகிறது.

பேசாமல் கேட்கிறேன்.

மனது கனக்கிறது.......................
இதற்கு என்ன சாட்சி.............. சார்ஜன் சீனிவாசன் கேட்கிறார்.

என்னை விடுங்கள்.
சில படங்களை காட்டுகிறேன் என்கிறேன்.

என் போட்டோ அல்பத்தை எடுத்துக் கொடுக்கிறேன்.

அல்பத்தை பார்த்த சார்ஜன் சீனிவாசனின் கண்கள் கோபத்தால் சிவக்கிறது.

இதையும் எடுத்துக் கொண்டு ஸ்டேசனுக்கு போகலாம் வாங்க என்கிறார்.

கன்னடத்தில் ஏதேதோ பேசுகிறார்கள்.
வேகமான பேச்சு அரை குறையாக புரிகிறது.
வந்த போது இருந்த வேகம் இப்போது அவர்களிடம் இல்லை
சற்று தணிந்திருந்தது.

இப்படியே வரட்டுமா?

இல்லை. உடுத்துக் கொண்டு வாங்க.

உடைகளை மாற்றிக் கொண்டு அவர்களோடு நடக்கிறேன்.

வெளியே நிற்கும் ஜீப்பில் என்னை ஏறச் சொல்கிறார்கள்.

அது நகர்கிறது.......................


இன்னும் நகரும்.......

நினைத்தாலும் மறக்க முடியாதவை : தடம் 1


1990

பெங்களூரை விட்டு வெளியேற வேண்டும் எனத் தோன்றுகிறது.

பல வருடங்கள் தொடர்ந்து பெற்ற வாய்ப்புகளை
உதறித் தள்ள வேண்டும்
நண்பர்களை பிரிய வேண்டும்
எனக்கு மிகவும் பிடித்த கால நிலை.............
இப்படி எத்தனையோ...........
முடிவுக்கு வர முடியாமல் தடுமாறுகிறேன்.

இருப்பது ஆபத்தானது
தொடர்வது நெருடலானது
எனக்காக வாழ்ந்த காதல் கூட கருகிய நிலை
எல்லாமே பொய்

"எல்லமே பொய் என்னால் எங்கும் போக முடியாது" என்கிறேன்.

"ஏன்?"

"அது அப்படித்தான்.................."

"நீ ஏதாவது தவறான முடிவு எடுத்திடாதே.
உன்னை தெரியாமல் கைது செய்திட்டோம்.
ஆனால் உனக்கு ஏதாவது நல்லது செய்யணும்.
என்ன வேணும் சொல்லு" என்கிறார் சீனிவாசன்"

"எனக்கு இப்போ தனியா இருக்கணும் யோசிக்கணும்............"

"வாங்க ரூமில கொண்டு போய் விடுறன்."

"வேண்டாம்"

"உங்க மேல யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க.
கதிர் சார் உங்க லாஜ் பணத்தை கூட கட்ட சொன்னார்."

நான் ஸ்டேசனை விட்டு நடந்தேன்.

என் பின்னே வந்த சீனிவாசன் ஒரு ஆட்டோவை நிறுத்தி
என்னோடு சிவில் உடையில் ஏறுகிறார்.

ஆட்டோ சிவாஜி நகர் Hotelலை நோக்கி நகர்கிறது.

நாங்கள் இறங்கியதும் ரூம் பையன்கள் ஓடிவருகிறார்கள்.

"என்ன சார் நடந்துச்சு"

நான் மெளனமாக சார்ஜன் சீனிவாசனை பார்க்கிறேன்.

"தப்பா அரட்ஸ் பண்ணிட்டோம்.
பிறகுதான் தெரியும் ஓஐசீ ஐயாவுக்கு தூரத்து உறவுக்காரர் ஜீவன் என்கிறது. இனி அவர்தான் சார் பில்லெல்லாம் கட்டுவார்."
என்கிறார் சீனிவாசன்

நான் மெளனமாகி சீனிவாசன் சொல்லும்
பொய்யை மறுதலிக்க முடியாமல் இருக்கிறேன்.

என் ரூமை திறந்து விட்ட ரூம் பையன்கள்
எங்களை கேட்காமலே டீ கொண்டு வந்து கொடுக்ககிறார்கள்.

ஒரு சில ரூபா டிப்ஸை விட
அவங்க கூட நாலு வார்த்தை அன்பா பேசுறதில
கிடைச்ச பாசம் அது.

"வாடிப் போயிட்டிங்க சார்.
குளிங்க ஜம்முண்ணு ஆகிடுவீங்க சார்."
என் அனுமதிக்குக் கூட காத்திராமல்
வென்னீர் கொண்டு வந்து வைத்தான் மணி.

"குளிச்சுட்டு தூங்குங்க. சாயந்தரம் வர்றன்"
என்று எழுந்த சீனிவாசன்
கொஞ்சம் பணத்தை எடுத்து தந்து விட்டு கிளம்பினார்.

அவர் போவதை வாசலில் நின்று பார்த்துக் கொண்டு நின்றேன்.
பணம் பறிக்கின்ற போலீஸ்காரரை பார்த்திருக்கேன்.
இப்படியும் பார்ப்பது அரிது.
மனதுக்குள் வியக்கிறேன்.
நான் உள்ளே போய் குளித்து விட்டு வரும் போது
மேசையில் யாரோ சாப்பாடு கொண்டு வந்து வைத்திருந்தார்கள்.

நான் கதவைத் திறந்த போது
ரூம்பாய் குமார் வெளியே நின்றிருந்தான்.

"சார் எனக்கு கொண்டாந்த சாப்பாடுதான்.
மனசு கேக்கல்ல. என்னால முடிஞ்சது இதுதான் சார்" என்றான்.

ஒருத்தனது நல்ல மனசு கோடியை விட பெறுமதி வாய்ந்தது என்பதை
அந்த வார்த்தை சொல்லாமல் புரிய வைத்தது.

நான் சாப்பிடத் தொடங்கியதும்
குமார் என் பக்கத்திலே நின்று
என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சாப்பிட்டு முடிந்ததும் என் கையை குமாரே கழுவி விட்டான்.

"உங்க சிரிப்பை திரும்ப பார்க்கணும் சார் தூங்குங்க................
சாயந்தரம் டீயோட வந்து எழுப்புறேன்" என்று போகும் போது

"கதவை சாத்திட்டு போ குமார்" என்றேன்.

"உள்ளாற சாத்துங்க சார்" என்றான்.

"எனக்கு ஒண்ணும் ஆவாவது சாத்திட்டு போ" என்று சொல்லி விட்டு
படுக்கையில் சாய்ந்த போது
தலையனை என்னை அறியாமலே நனைவது தெரிந்தது....................

தொடரும்

நினைத்தாலும் மறக்க முடியாதவை



நடந்து வந்த பாதையை
பெரும்பாலும் யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை
நடந்து கொண்டிருப்பவனுக்கு அது தேவையில்லை
ஆனால் நடக்க முடியாமல் போனாலோ
இல்லை திரும்பி வர நேர்ந்தாலோ மட்டுமே
அது குறித்து சிந்திக்கிறோம்

புதிய ஒருவரை சந்திக்கும் போது
அவருக்கு நம்மை அறிமுகம் செய்ய வேண்டி வருகிறது
இல்லை பழைய சினேகிதங்களை சந்திக்கும் போது
கடந்த காலத்தில் நடந்தவற்றை நினைத்து சிரிக்கவோ
அல்லது
அழவோ வேண்டிய நிலை ஏற்படுகிறது

நல்ல நிகழ்வுகள் என்பன
குறைவாகவே மனதில் பதிவாகிறது
தாக்கங்களும் வேதனைகளும் மட்டும்
மனித மனங்களின் போக்க முடியாத கறையாகி
அல்லது
வடுவாகி காயமாகி விடுகிறது

வயதாகும் போது
உடலிலும் உள்ளத்திலும் மாற்றம் தெரிகிறது
கண்களிலும் அடி மனதிலும்
தொடர்ந்தும் அதே குணாம்சம்
தொடர்கிறது.............

திரும்பிப் பார்க்க வைத்த
என் உறவுகளுக்கு என் முதற்கண் நன்றி!

என் மனதை திறப்பதாய்
என்னை சிலுவையில் அறைந்து கொள்ளப் போகிறேன்
அன்புடன்
உங்கள்
அஜீவன்